ஐ.பி.எல். 2026 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 12 குறித்து அஸ்வின் கணிப்பு

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 19-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் மினி ஏலம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்த ஏலத்தில், ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள கையிருப்பு தொகைக்கு ஏற்ப வீரர்களை குறிவைத்து பல்வேறு வியூகங்களுடன் செயல்பட்டன. ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார்.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, உள்நாட்டு வீரர்களை அதிகம் கவனித்தது. சர்வதேச அனுபவம் இல்லாத இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரஷாந்த் வீர் மற்றும் சிக்சர் அடிப்பதில் வல்லவரான கார்த்திக் சர்மா ஆகியோரை பெரிய தொகைக்கு வாங்கியது. மொத்தத்தில், சென்னை அணி 9 புதிய வீரர்களை ஏலத்தில் பெற்றது.

முன்னதாக சிஎஸ்கே 15 வீரர்களை தக்க வைத்திருந்தது. அதோடு, சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் அணியில் இணைத்தது. தற்போது ஏலத்தில் 9 வீரர்களை வாங்கியதால், சென்னை அணியின் வீரர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கான பிளேயிங் 12 (இம்பேக்ட் வீரர் சேர்த்து) எப்படி இருக்கும்? என்ற கேள்வியை சிஎஸ்கே நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் எழுப்பியது. அந்த பதிவிற்கு இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார்.

அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை அணியின் பிளேயிங் 12 குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தேர்வு செய்த அணியமைப்பு பின்வருமாறு:

  • ஆயுஷ் மாத்ரே

  • சஞ்சு சாம்சன்

  • ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்)

  • ஷிவம் துபே

  • பிரெவிஸ்

  • பிரஷாந்த் வீர்

  • மகேந்திரசிங் தோனி

  • அகீல் ஹொசைன் / மேட் ஹென்றி

  • கலீல் அகமது

  • நாதன் எல்லீஸ்

  • நூர் அகமது

இம்பேக்ட் வீரர்கள்: அன்ஷுல் கம்போஜ் / கார்த்திக் சர்மா, ஷ்ரேயாஸ் கோபால் / சர்பராஸ் கான்.

அஸ்வின் வெளியிட்ட இந்த அணியமைப்பு, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தோனி இன்னும் அணியில் இடம்பெறுவதை அவர் கணித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதேசமயம், புதிய உள்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பதும், அணியின் எதிர்கால வலிமையை வெளிப்படுத்துகிறது.