அதிமுக – பாஜக தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை சென்னை
சென்னை: தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு பா.ஜனதா கட்சி தனது ஆயத்தப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்களுடன் மத்திய நிர்வாகம் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இணையாக, சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகல் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். அவர் வருகையின் போது, தொகுதிப்பங்கீடு, கூட்டணி விவகாரம், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு, வரவிருக்கும் தேர்தலுக்கான அதிமுக – பாஜக கூட்டணியின் நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நாளைய சந்திப்பின் மையப்புள்ளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பியூஷ் கோயலுக்கு தனது இல்லத்தில் விருந்தளிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சென்னை பசுமை வழிசாலை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் விருந்தோம்பல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதியம் நடைபெறும் இந்த சந்திப்புக்குப் பிறகு, பியூஷ் கோயல் மாலை நேரத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியையும் சந்திக்க உள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணியின் எதிர்காலம், தொகுதிப்பங்கீடு, தேர்தல் வியூகங்கள் ஆகியவை குறித்து நாளைய பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.