புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், தென்னங்குடி கிராமத்தில் உள்ள அரசு வேளாண் பண்ணையில் நேற்று (11.12.2025) களை மேலாண்மை குறித்த வயல்வெளிப் பள்ளி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. வேளாண் அலுவலர் திரு. ஆலன் தலைமையில், பஜன்கோவா விவசாயக் கல்லூரியின் இணை பேராசிரியர் மற்றும் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் நிரல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் ஒருங்கிணைப்பில், இப்பயிற்சி நிகழ்ச்சி மாணவர்–மாணவிகளின் செயல்விளைவான பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வின்போது, களைகள் மற்றும் அவற்றால் ஏற்படும் விளைச்சல் மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் மாணவர்–மாணவிகளுக்கு இடையே கருத்துப் பரிமாற்ற கலந்தாய்வு வயல்வெளியிலேயே நடைபெற்றது. மாணவர்கள் சுற்றுவட்டார வயல்களில் உள்ள பல்வேறு வகையான களைகளை நேரடியாகக் கண்டறிந்து, அவற்றை சேகரித்து, விவசாயிகள் முன்னிலையில் காட்சிப்படுத்தி ஒவ்வொரு களையின் தன்மை மற்றும் தாக்கங்களை பற்றி விளக்கினர்.

களைகளின் வகைகள் குறித்து மாணவி அன்பரசி எடுத்துரைத்தார். களைகளின் வாழ்க்கைச் சுழற்சியில் உள்ள முக்கிய நிலைகள் குறித்து மாணவி கிருத்திகா விளக்கினார். களைகளால் ஏற்படும் மகசூல் குறைவு மற்றும் பொருளாதார இழப்பு குறித்து மாணவி கு.வ. ஜெயபாரதி பேசினார். களை எடுக்கும் பயனுள்ள முறைகள் குறித்து மாணவி கரோல் ஷெரின் விரிவாக தெரிவித்தார்.

இந்த விரிவாக்க நடவடிக்கைக்கு, கல்லூரியின் விரிவாக்கப் பிரிவு இணை பேராசிரியரும் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் நிரல் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ். ஆனந்த்குமார், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் களப்பணியாற்றி வரும் 29 மாணவர்–மாணவிகளை வேளாண்துறையுடன் இணைந்து விவசாயிகளுக்கு பணியாற்ற வழிநடத்தினார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஆரம்பத்தில் வேளாண் அலுவலர் திரு. ஆலன் வரவேற்றார். இறுதியாக மாணவி தர்ஷினி தேவி நன்றியுரை வழங்கினார்.