
கேரளாவில் ஷிகெல்லா தொற்று பரவல் மீண்டும் கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
ஷிகெல்லா என்பது குடல்களை பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இந்த நோய் பெரும்பாலும் மாசுபட்ட உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த தொற்று ஏற்பட்டால் கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்றுவலி, வாந்தி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கைகளை சுத்தமாக கழுவுதல், கொதிக்கவைத்த குடிநீரை பயன்படுத்துதல் மற்றும் சுகாதாரமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.