
சோமவதி அமாவாசையை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரமான ஹரித்வாரில் பக்தர்கள் திரளாக குவிந்தனர். கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற படித்துறைகளில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு மேற்கொண்டனர்.
இந்துக்கள் மத்தியில் சோமவதி அமாவாசை மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. அமாவாசை திங்கட்கிழமையுடன் இணைந்து வரும்போது அதனை சோமவதி அமாவாசை என்று அழைக்கின்றனர். இந்த நாளில் கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இதையொட்டி ஹர் கி பௌரி உள்ளிட்ட முக்கிய கங்கைக் கரைப் படித்துறைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிறப்பு வழிபாடுகளையும் நடத்தினர்.
பக்தர்கள் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. போலீசார் மற்றும் மீட்புப் படையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.