
திருப்பதி திருமலையில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு தரிசன காலத்தை முன்னிட்டு நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு குவிந்து வருகின்றனர். இதனால் வைகுண்டம் காத்திருப்பு வளாகங்கள் முழுவதும் பக்தர்களால் நிரம்பியுள்ளன.
திருமலையில் எங்குப் பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் காட்சி காணப்படுகிறது. இலவச தரிசன வரிசையில் உள்ள பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தேவஸ்தான நிர்வாகம் கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், திருமலை செல்லும் பக்தர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.