கேரள உள்ளாட்சி தேர்தல் – 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவு; 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில், இரு கட்டங்களிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 244 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 9ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்றது. தொடர்ந்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த 14 மாவட்டங்களிலும் மொத்தம் 12,391 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 3 மாநகராட்சிகளில் 188 வார்டுகள், 7 மாவட்ட ஊராட்சிகளில் 182 வார்டுகள், 47 நகராட்சிகளில் 1,829 வார்டுகள், 77 ஊராட்சி ஒன்றியங்களில் 1,177 வார்டுகள் மற்றும் 470 கிராம ஊராட்சிகளில் 9,015 வார்டுகள் அடங்கும்.

மொத்தம் 38,994 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில், 18,974 ஆண்கள் மற்றும் 20,020 பெண்கள் போட்டியிட்டனர். இரண்டாம் கட்டத்தில் மட்டும் 1 கோடியே 53 லட்சத்து 37 ஆயிரத்து 176 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். இதற்காக 18,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது; பின்னர் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்காளர்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு வரிசையாக வந்து வாக்களித்தனர். பதற்றமான 2,055 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மொத்தம் 72,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வீடியோ பதிவு கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் சிரைக்கல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இரண்டாம் கட்டத்தில் சராசரியாக 75.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியாக பார்க்கும்போது, வயநாடு 77.34% வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. கோழிக்கோடு 76.47%, மலப்புரம் 76.85%, கண்ணூர் 75.73%, பாலக்காடு 75.60%, காசர்கோடு 74.03% மற்றும் திருச்சூர் 71.88% வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இன்று காலை 8 மணி முதல் 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.