எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாள்: அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் மலர் அஞ்சலி — கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை:
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவருமான பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 109-ஆவது பிறந்தநாள் விழா நாளை (ஜனவரி 17, சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயலகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிமுக தலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாளை ஒட்டி, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள தலைமை அலுவலக வளாகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு முக்கிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதில், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார். பின்னர் கழகக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த நிகழ்வில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், அதிமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாய மற்றும் மீனவர் பிரிவுகள், மருத்துவ அணி, இலக்கிய அணி, வர்த்தக அணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, கலைப் பிரிவு ஆகிய பல பிரிவுகளின் நிர்வாகிகளும் பெருமளவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி மற்றும் வட்ட அளவில் உள்ள கழக நிர்வாகிகள் தங்கள் தங்களது பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என தலைமை செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், கட்சி அமைப்புகள் செயல்படும் பிற மாநிலங்களிலும் — புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய இடங்களிலும் — 17ஆம் தேதி எம்.ஜி.ஆரின் சிலைகள் மற்றும் படங்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை செயலகம், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று மரியாதை செலுத்தி, அவரது மக்கள் நலக் கொள்கைகளை நினைவு கூறி செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.