சென்னை:
அதிமுக கூட்டணியில் இன்னும் சில நாட்களில் புதிய கட்சி ஒன்று சேரவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சியின் போது, எடப்பாடி பழனிசாமி ஊடகங்களுக்கு இந்த தகவலை தெரிவித்தார்.
அதிமுக சார்பில் விருப்ப மனு படிவங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிடுவதற்காக மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 2,187 பேர் தங்களது தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நேர்காணல் இன்று தொடர்ந்தது. இதில் சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து விருப்ப மனு அளித்தவர்கள் பங்கேற்றனர்.
நேர்காணலில் பங்கேற்றவர்களிடம், “அதிமுகவில் எத்தனை ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளீர்கள்?”, “போராட்டங்களில் பங்கேற்றுள்ளீர்களா?”, “உங்கள் தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்ன?” என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், வேட்பாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
“அதிமுக கூட்டணியில் இன்னும் சில நாட்களில் புதிய கட்சி ஒன்று இணைகிறது. எங்கள் கூட்டணி வலிமையாக வளர்ந்து வருகிறது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும்,” என்றார்.
இந்த அறிக்கை அதிமுக ஆதரவாளர்களிடையே ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.