மதுரை: குடும்பத்தின் பெயரை “பிராண்ட்” ஆக வைத்துக்கொண்டு நான் தேர்தலில் வரவில்லை; எனது தனி வெற்றி, தனிநபர் உழைப்பால் வந்தது என மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி தெரிவித்தார். மதுரை, தைக்கால் தெரு, அனுமார் கோவில் படித்துறை, பொன்னகரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், மக்களை நேரில் சந்தித்து பேசியபோது இக்கருத்தை வலியுறுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: பழநி என்ற ஊரில் என் பாட்டி இட்லி விற்று நான்கு பிள்ளைகளை வளர்த்தார். அப்படி வளர்க்கப்பட்டு அரசு வேலைக்குச் சென்றவர்தான் என் அப்பா. சராசரி குடும்பத்தில் பிறந்து தனி மனிதனாக சென்னை சென்று, சினிமாத் துறையில் போராடி இந்த நிலைக்கு வந்துள்ளேன். சுந்தர்.சி என்ற என் பெயரைச் சொன்னால் இப்போது தமிழகத்திற்கு ஓரளவு தெரியும் என்ற அளவுக்கு ஒரு “பிராண்ட்” ஆக மாறிவிட்டேன். இது எனது தனிப்பட்ட உழைப்பு; குடும்பப்பெயர் காரணமாக வராத வெற்றி இது என்றார்.
“குடும்பப் பெயரை வைத்துக்கொண்டு 25 ஆண்டுகள் அமெரிக்காவிலும், லண்டனிலும் படித்துவிட்டு, அதே பெயரைச் சொல்லி மட்டுமே எம்.எல்.ஏ இடத்தை பெற்று, இங்கே வந்து தேர்தலில் நிற்கவில்லை” என்றும், “நான் ஓர் அந்நிய நாட்டவராக இல்லை; குடும்பப்பெயரை மட்டுமே பிராண்ட் செய்து இங்கு வந்து நிற்கவும் இல்லை” என்றும் அவர் வலியுறுத்தினார்.
பழனியில் பிறந்த பழனிவேல் தியாகராஜன் பற்றிப் பேசும்போது, “அவரது பெயருக்கு முன்னால் இனிஷியலைப் போட்டால்தான் அவர் யார் என்பது தெரியும்; அவரது பிராண்ட் ‘ஷூனியம்’ (ஜீரோ). ஆனால், அவர் சேர்ந்த குடும்பம் விஷயத்தில் முன்னோர்கள் பெரிய நல்ல காரியங்களைச் செய்துள்ளனர். அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை” என்றும் சுந்தர்.சி குறிப்பிட்டார். அப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், இன்று இப்படி தேர்தல் வாகனப் பேச்சு செய்வது ஏற்புடையதா என்று வினவினார்.
இதுபோன்ற பேச்சு ஒருவர் தோல்விக்கான முதல் அடியையும், மறுபக்கம் நான் வெற்றிக்கான முதல் அடியையும் நிறுத்துகிறது; இதுதான் உண்மை என்றார் சுந்தர்.சி. மக்கள் ஒரு அமைச்சரின் வீட்டுக்குச் சென்று குறைகளைச் சொல்ல முடியுமா? மெட்ரோ, மேம்பாலம், குடிநீர் திட்டம் போன்ற திட்டங்களை சூறாவளியாகச் சொல்ல வேண்டிய நேரத்தில், இந்தத் தொகுதியில் என்ன செய்துள்ளார் என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும் என்றார் அவர்.