எர்ணாகுளம்: 2017 பிப்ரவரி 17ஆம் தேதி, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்து வீட்டிற்கு காரில் திரும்பிய நடிகை, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு உள்ளானார். அந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில், நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே சம்பவம் நடந்ததாகக் கூறி கேரள போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், நடிகையின் கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த எட்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில், திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என கேரள நடிகைகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நடிகை பார்வதி திருவொத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வெளியிட்டுள்ளார். அதில், “இது நீதியா? அவர் தனக்காக மட்டுமல்ல, கேரளாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்காகவும் போராடினார். அவரது போராட்டம், பெண்கள் சமூகத்தில் நிற்கும் விதத்தையும், போராடும், பேசும், வன்முறைக்கு எதிர்வினையாற்றும் விதத்தையும் மாற்றியது. நீதி என்றால் என்ன? இப்போது நாம் மிகவும் கொடூரமாகவும் திட்டமிட்டதாகவும் அமைந்த ஒரு கதையின் முடிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என வேதனை தெரிவித்துள்ளார்.