நாங்குநேரி இரட்டைக் கொலை: பழிக்குப் பழி வாங்கிய தாக்குதல் – 7 பேர் கைது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 19 முதல் 23 வயதுக்குட்பட்ட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடைபெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2-ம் தேதி இரவு பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு தேநீர் கடை முன்பு சிலர் வழக்கம்போல் பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், அங்கு இருந்தவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் சிதறி ஓடினர்.

இந்த தாக்குதலில் பெரும்பத்து இந்திராகாலனியைச் சேர்ந்த ஜான் (42) மற்றும் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நெல்சன் (60), கணேசன் (52), பிரபாகரன் (50), ராமசாமி (70) மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த சசிகுமார் (26) ஆகிய ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை தொடங்கினர். தொடர்ந்து மேற்கொண்ட தீவிர விசாரணையில் தென்னிமலை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (20), அந்தோணி மைக்கேல்ராஜ் (19), உச்சிமாகாளி (23), வசந்தகுமார் (19), சுப்பையா (19), கல்யாணி (20), இசக்கிராஜா (19) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை பகுதியில் நடந்த தொடர் கொலைச் சம்பவங்களுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் குழுவில் இருந்த இளைஞர்கள் கடந்த சில நாட்களாக பெரும்பத்து கிராமத்தில் சுற்றி நோட்டமிட்டு, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக கூடும் இடத்தைத் தேர்வு செய்து தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதலுக்குப் பிறகு வேகமாக தப்பிச் செல்லும் திட்டத்துடன், மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கொல்லப்பட்ட ஜானின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தற்போது சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரையும் போலீசார் கைது செய்ததையடுத்து, பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக ஏர்வாடி வழியாக நாகர்கோவில் செல்லும் பேருந்து போக்குவரத்து மீண்டும் சீராக இயங்கத் தொடங்கியுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக களக்காடு செல்லும் சாலையில் மட்டும் போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொல்லப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.