ஹவானா,
அமெரிக்காவின் கடும் அழுத்தங்களுக்கு கியூபா தலைமை வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “எங்களுக்கு யாரும் ஆணையிட முடியாது; கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை தாயகத்தைப் பாதுகாக்க தயாராக இருக்கிறோம்” என கியூபா அதிபர் மிகுவெல் டயாஸ்-கானல் மெர்முடெஸ் உறுதியுடன் தெரிவித்துள்ளார். இது, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு பதிலடியாக வெளியாகியுள்ளது.
கடந்த 3-ஆம் தேதி, அமெரிக்க ராணுவம் வெனிசுலா நாட்டிற்குள் நுழைந்து, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அவர்கள் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டு, அமெரிக்க சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், வெனிசுலாவிலிருந்து கியூபாவுக்கு இனி எரிபொருள் அல்லது நிதி ஆதரவு எதுவும் செல்லக்கூடாது என டிரம்ப் அறிவித்தார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் செய்யாமல் கியூபா நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது” எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். வெனிசுலாவை பெரிதும் நம்பி வரும் கியூபாவின் எரிபொருள் தேவையை முடக்கவே இந்த நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த சூழலில், டிரம்பின் கருத்துகளுக்கு கடும் எதிர்வினையாக கியூபா அதிபர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில் பதிலளித்துள்ளார். அதில், “மனித உயிர்களையே வியாபாரமாக பார்க்கும் நாடுகளுக்கு, கியூபாவை நோக்கி விரல் நீட்ட எந்த தார்மீக உரிமையும் இல்லை. எங்கள் மக்கள் தங்களுக்கான அரசியல் முறையைத் தேர்வு செய்ததையே பொறுக்க முடியாமல், எங்கள்மீது வெறுப்பை பொழிகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கியூபாவின் பொருளாதார சிக்கல்களுக்கு புரட்சியே காரணம் என கூறுபவர்கள் உண்மையை மறைக்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளே இன்றைய நெருக்கடிகளுக்கு முக்கிய காரணம். கியூபா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு. எங்களை யாரும் கட்டளையிட முடியாது. நாங்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை; ஆனால் எங்கள் தாயகத்தை பாதுகாக்க கடைசி சொட்டு இரத்தம் வரை போராடுவோம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பதிலடி, அமெரிக்கா–கியூபா இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.