புதுடெல்லி:
கிரிக்கெட் உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்த ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் தெண்டுல்கர், தனது சாதனைகளை எதிர்காலத்தில் விராட் கோலி முறியடிப்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான சுவாரசிய தகவலை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பகிர்ந்துள்ளார்.
பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, சமீபத்தில் சச்சின் தெண்டுல்கரின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது இருவரும் நீண்ட நேரம் உரையாடி, பின்னர் ஒன்றாக மதிய உணவும் எடுத்துக் கொண்டுள்ளனர். அப்போது உரையாடலின் இடையே, “நீங்கள் கிரிக்கெட் உலகில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளீர்கள். இந்த சாதனைகள் ஒருநாள் யாராவது முறியடிப்பார்கள் என நினைக்கிறீர்களா?” என்று சச்சினிடம் சுக்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த சச்சின், “சாதனைகள் படைக்கப்படுவது அவை ஒருநாள் முறியடிக்கப்படுவதற்காகத்தான். அதனால், என்னுடைய சாதனைகளும் எதிர்காலத்தில் முறியடிக்கப்படும்” என்று தன்னிச்சையாக பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து, “அப்படியானால் அந்த வீரர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று சுக்லா மீண்டும் கேட்டபோது, உணவருந்திக் கொண்டே சச்சின், “என் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியதாக சுக்லா தெரிவித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களையும் சேர்த்து 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 34,357 ரன்களை குவித்துள்ளார். இதில் 100 சதங்கள் மற்றும் 164 அரை சதங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களையும், 51 சதங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 463 போட்டிகளில் ஆடி 18,426 ரன்களையும், 49 சதங்களையும் சேர்த்துள்ளார். மேலும், 2011ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவிற்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்தது, சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத சாதனையாக அமைந்தது.
இதற்கிடையே, தற்போதைய தலைமுறையின் முன்னணி வீரரான விராட் கோலி, இதுவரை 559 சர்வதேச போட்டிகளில் விளையாடி 28,215 ரன்களையும், 85 சதங்களையும் அடித்துள்ளார். சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் 15 சதங்கள் தேவைப்படுகின்றன; அதை முறியடிக்க 16 சதங்கள் தேவை. ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் 54 சதங்கள் அடித்து, சச்சினின் ஒருநாள் சத சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையையும், 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்து விராட் கோலி முறியடித்துள்ளார். சச்சின் உலகக் கோப்பையில் 673 ரன்கள் எடுத்ததே அதற்கு முன் சாதனையாக இருந்தது.
2027ஆம் ஆண்டு வரை விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சச்சின் கூறிய கணிப்பு நிச்சயமாக நனவாகும் வாய்ப்பு அதிகம் என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.