பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
கராச்சி: பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை விற்பனை செய்வதற்கான ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தானின் முக்கிய ஊடகமான டான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு கழகம் காங்கிரசுக்கு அனுப்பிய கடிதத்தில், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு முயற்சிகளுக்கும், வருங்கால பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் உதவியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் படி, பாகிஸ்தானுக்கு மேம்படுத்தப்பட்ட விமான மின்னணுவியல், பயிற்சி வசதிகள், முழுமையான தளவாட விநியோகம் ஆகியவை கிடைக்கின்றன. இதன் மூலம் இரு நாடுகளின் விமானப்படைகள் தடையற்ற ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு பெறுகின்றன. மேலும், போர் எதிர்ப்பு நடவடிக்கைகள், கூட்டு பயிற்சிகள் போன்றவற்றை இணைந்து மேற்கொள்ளும் சூழல் உருவாகும். பாகிஸ்தானுக்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தளவாட உதவிகள் அமெரிக்கா மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து கிடைக்கும்.
இதற்கு முன்பு, இந்தியாவுக்கு ரூ.840.25 கோடி மதிப்பிலான ஆயுத விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்தது. அந்த ஒப்பந்தம் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தவும், மண்டல அளவிலான அச்சுறுத்தல்களை தடுக்கவும் உதவியாக அமையும் என கூறப்பட்டது. இந்த சூழலில், பாகிஸ்தானுடனும் அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு குழப்பங்கள், வன்முறை, வெள்ளம், மழை போன்ற இயற்கை பேரழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடு சர்வதேச நாணய நிதியகம் (IMF) உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருப்பது, தெற்காசியாவின் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.