இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் புதிய அப்டேட் – பயனர்களுக்கு மெட்டா வழங்கிய சிறப்பு வசதி

சமூக வலைத்தளங்களில் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் இன்ஸ்டாகிராம் முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் 3 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் தினசரி இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது இன்ஸ்டாகிராமின் “ரீல்ஸ்” எனப்படும் குறும்பட வீடியோ வசதி. பல்வேறு விதமான வீடியோக்களை பதிவேற்றி அதிக லைக்ஸ், கமெண்டுகள், பின்தொடர்பவர்களை பெறுவதற்காக கிரியேட்டர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அதேசமயம், பயனர்கள் ரீல்ஸ்களை பார்த்து பொழுதை கழிப்பதும் வழக்கமாகி விட்டது.

போட்டியை சமாளிக்கவும், பயனர்களை தொடர்ந்து கவரவும், இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது “ஸ்டோரீஸ்” பகுதியில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இன்ஸ்டாகிராமில் பப்ளிக் அக்கவுண்டில் பகிரப்படும் ஸ்டோரீஸ்களை, பயனர்கள் தங்கள் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னர், ஒருவர் உங்களை டேக் செய்தால் மட்டுமே அந்த ஸ்டோரீஸ்களை உங்கள் பக்கத்தில் பகிர முடிந்தது. ஆனால் இப்போது, டேக் செய்யாதிருந்தாலும், பப்ளிக் அக்கவுண்டில் பகிரப்படும் ஸ்டோரீஸ்களை பயனர்கள் தங்கள் பக்கத்தில் பகிர முடியும். இதன் மூலம் பிரபலங்களின் ஸ்டோரீஸ்களை, ரசிகர்கள் தங்கள் பக்கத்தில் எளிதாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த புதிய அப்டேட், பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பிரபலங்களை பின்தொடர்பவர்கள், அவர்களின் ஸ்டோரீஸ்களை தங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், இன்ஸ்டாகிராம் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் நிறுவனம், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், சமூக வலைத்தளங்களில் போட்டியை சமாளிக்கவும் தொடர்ந்து புதுமையான அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த புதிய ஸ்டோரி அப்டேட், பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் முக்கிய பங்காற்றும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.