ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ்: பெரம்பலூர் விவசாயி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

பெரம்பலூர், நவம்பர் 23

பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமிக்கு, ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைச் செலுத்தக் கோரி வணிகவரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி அவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஸ்ரீரங்கபாளையத்தில் இரும்புக் கடை நடத்தி, பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்ததாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவையாக ரூ.1.70 கோடி செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஆதார் மற்றும் வங்கி ஆவணங்களை வேறு நபர்கள் பயன்படுத்தி, தனது பெயரில் நிறுவனம் தொடங்கியிருக்கலாம் என கிருஷ்ணசாமி மனுவில் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

— அரசு பார்வை செய்திப் பிரிவு