சென்னை: பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலுக்கு நிவாரணம் – கிழக்கு தாம்பரம் புறவழிச்சாலை திட்டம் மீண்டும் தொடக்கம்!
சென்னை: சென்னை தெற்குப் பகுதியான பெருங்களத்தூரில் நீண்ட காலமாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கிழக்கு தாம்பரம் புறவழிச்சாலை திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் தரும் என நம்பிக்கை நிலவுகிறது.

மொத்தம் 9 கிலோமீட்டர் நீளத்தில் 6 வழிச்சாலையாக உருவாகும் இத்திட்டம், ஜிஎஸ்டி சாலையில் பீர்க்கன்காரணை பழைய காவல் நிலையம் அருகே தொடங்கி, சதானந்தபுரம், ஆலப்பக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சியர், ராஜகீழ்ப்பக்கம், சேலையூர் வழியாக தாம்பரம்-வேளச்சேரி சாலையை இணைக்கிறது. இதனால் தென் சென்னை மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடங்களுக்கு நேரடி இணைப்பு கிடைக்கும்.
பெருங்களத்தூர் நற்செய்தி
இத்திட்டம் புதிதல்ல. கடந்த 10 ஆண்டுகளாக பேசப்பட்டாலும், நிலக்கையகப்படுத்தல் மற்றும் அனுமதிப் பிரச்சினைகளால் மெதுவாக முன்னேறியது. 2013ல் சேலையூரிலிருந்து திருவஞ்சியர் வரை 3 கிலோமீட்டரில் 27.5 கோடி ரூபாய் செலவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. திருவஞ்சியரிலிருந்து மப்பேடு வரை 1.4 கிலோமீட்டரில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. பெருங்களத்தூரிலிருந்து அகரம் தென் சாலை சந்திப்பு வரை 26 கட்டிடங்கள் அகற்றப்பட்டு, 23 இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலைப் பணிகள் நிறைவுற்றன.
தற்போதைய முன்னேற்றம்
இப்போது அகரம் தென் சாலை அம்பேத்கர் நகர் சந்திப்பிலிருந்து ராஜகீழ்ப்பக்கம் ஏரி வழியாக வேளச்சேரி சாலை வரை 1,442 மீட்டர் நீளத்தில் 6 வழிச்சாலை மேம்பாலப் பணிகள் தொடங்கியுள்ளன. 208.31 கோடி ரூபாய் செலவில் 23 மீட்டர் அகலத்தில் கட்டப்படும் இமேம்பாலத்தை 18 மாதங்களில் முடிக்க அதிகாரிகள் இலக்குவைத்துள்ளனர். ராஜகீழ்ப்பக்கம் ஏரிப் பகுதியில் 126 கட்டிடங்கள் அகற்றப்பட்டு அடித்தளப் பணிகள் நடக்கின்றன.
போக்குவரத்து நிவாரணம்
சாலை முழுமையாக அமையும் போது பெருங்களத்தூரிலிருந்து நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பக்கம், திருவஞ்சியர், சேலையூர் வழியாக கனரக வாகனங்கள் நேரடியாக வேளச்சேரி சாலையை அடையும். தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் தினசரி ஏற்படும் வாகன நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் திட்டம் முழுமையடையவில்லை. 4.46 ஹெக்டேர் வனத்துறை நில அனுமதி மற்றும் 8.92 ஹெக்டேர் மாற்று நில ஒதுக்கீடு இன்னும் நிலுவையில் உள்ளதால் சிலப் பணிகள் தாமதமடைகின்றன. 2013 முதல் பேசப்பட்ட இத்திட்டம் இனியாவது தடையின்றி முடியுமா என பெருங்களத்தூர் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.