ஜெருசலேம்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து நேற்று காலை தனியார் அரசுப் விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை நேரத்தில் ஜெருசலேம் சென்றடைந்தார். அங்கு பெஞ்சமின் நெதன்யாகு தன்னுடைய மனைவி சாரா நெதன்யாகுவுடன் விமான நிலையத்திற்கே வந்து மோடியை நேரில் வரவேற்றார். மோடி இஸ்ரேல் வருவது இது இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர், பிரதமர் மோடிக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இருநாட்டு பிரதமர்களும் விமான நிலையத்திலேயே தனிப்பட்ட முறையில் சந்தித்து பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம், விவசாயம், நீர்வள மேலாண்மை, ராணுவ மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களிடையிய உறவுகள் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படும் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அந்த நாட்டு நாடாளுமன்றமான நெசெட்-ல் உரையாற்றினார். தனது உரையில், மோடி கடந்த 2023ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலை கண்டித்தார். அவர் உரையில், “140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளையும் நட்பின் செய்தியையும் என்னுடன் கொண்டு வந்துள்ளேன். இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மனிதத்தன்மைக்கு எதிரானது. உங்கள் வலியும் துயரமும் எங்களுடையதும்தான். எந்த காரணத்திற்கும் பொதுமக்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், “பயங்கரவாதம் சமூக ஒற்றுமையையும் வளர்ச்சியையும் சீர்குலைக்கிறது. இதை எதிர்கொள்வதற்கான உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். காசா அமைதி திட்டத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. அந்த திட்டம் இந்த பிராந்திய மக்களுக்கு நீதியான, நீடித்த அமைதியை வழங்கும் என்பதில் நம்பிக்கை வைக்கிறோம். அமைதி பாதை சிரமமானது என்றாலும், இந்தியா உரையாடல் மற்றும் நிலைத்தன்மைக்காக எப்போதும் உங்களுடன் நிற்கும்” என்று அவர் கூறினார்.

இந்த உரைக்குப் பின்னர், மோடிக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருதான “நெசெட் சபாநாயகர் பதக்கம்” வழங்கப்பட்டது. இதை அந்நாட்டு சபாநாயகர் அமீர் ஒஹானா வழங்கினார்.

இந்த விருதைப் பெறும் முதல் இந்திய பிரதமராகவும், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய தலைவராகவும் மோடி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் அமெரிக்கா–ஈரான் பதற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளின் மத்தியில், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.