சென்னை:
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விரிவாக விளக்கினார். உரையின் தொடக்கத்தில், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை உலகளவில் உயர்த்தும் முயற்சிகள் குறித்து அவர் குறிப்பிட்டார். திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை மொழிகளில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், தமிழின் மரபு மற்றும் மொழிக்காக பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், சோழர், நொய்யல், நவாய் போன்ற அருங்காட்சியகங்கள் ரூ.285 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருவதாகவும், கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 10,469 வீடுகள் கட்டுவதற்காக ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் 6,010 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விடியல் பேருந்து திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன் பெற்றுள்ளார்கள் எனவும், சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், மகளிர் நலனுக்கான தோழி விடுதிகள், பெண் ஓதுவார் நியமனங்கள், அன்புக் கரங்கள், தாயுமானவர் திட்டம் போன்றவை அரசின் மகளிர் நலக்கொள்கைகளின் அடையாளம் எனவும் வலியுறுத்தினார்.
அதேபோல், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாகவும், இதற்காக ரூ.1,889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், மூத்த குடிமக்களுக்கு அன்பு சோலைகள் அமைத்தல் போன்றவை சமூக நலனுக்கான அரசின் முக்கிய முயற்சிகளாகும் என்றார்.
அயலக தமிழர்களுக்காக தமிழ் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், இதற்காக பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உரையின் இறுதியில் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். ஏற்றுமதி வளர்ச்சி, பண வீக்கக் கட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடு ஆகிய துறைகளில் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் உள்ளது” என கூறினார்.
ஆனால், அரசியல் வட்டாரங்களில் இதே உரை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. “வறுமை ஒழிப்புப் போர்” என்ற பெயரில் அரசியல் நாடகம் நடக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக நலத் திட்டங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், தேர்தல் நெருங்கும் சூழலில் இத்தகைய அறிவிப்புகள் அரசியல் நோக்கத்துடன் கூறப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.