அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: உடனடியாக முடிவுகளை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள உதவி பேராசிரியர் நியமனங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 61 பாடப்பிரிவுகளுக்கு உட்பட்ட 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 27-ஆம் தேதி தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்குப் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. சுமார் 42,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வு முடிந்து தற்போது ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும், முடிவுகள் முழுமையாக வெளியிடப்படாதது தேர்வாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மெத்தனப் போக்கினால், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் எனது கண்டனத்திற்குப் பிறகு, 61 துறைகளில் வெறும் 5 துறைகளுக்கு மட்டும் முடிவுகள் வெளியிடப்பட்டன. அவற்றில் தேர்வு செய்யப்பட்டவர்களில் வெறும் 5 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 56 துறைகளுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தயார் நிலையில் இருந்தும், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி முடிவுகள் வெளியிடப்படாமல் காலம் கடத்தப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்து 40 நாட்கள் கடந்த நிலையிலும், தேர்வு முடிவுகளை வெளியிடாதது எவ்விதத்திலும் நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்லூரிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15-ஆம் தேதியான இன்று முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், போதிய பேராசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது சுமார் 8000-க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தச் சூழலில், தேர்வு நடத்தப்பட்ட பணியிடங்களுக்குக் கூட தகுதியானவர்களை நியமிக்காமல் அரசு காலம் கடத்துவது மாணவர்களின் நலனுக்கு எதிரானது. எனவே, மீதமுள்ள 2705 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை நடப்பு மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

மேலும், உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே 27-ஆம் தேதி அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில், கூடுதலாக 1292 உதவி பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான புதிய அறிவிக்கையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கல்வித்துறையில் நிலவும் இந்தத் தேக்க நிலையை நீக்கி, தகுதியுள்ள ஆசிரியர்களை விரைந்து பணியில் அமர்த்த வேண்டும் என்பதே தேர்வாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.