புதுச்சேரியில் த.வெ.க. பொதுக்கூட்டம் – கடுமையான கட்டுப்பாடுகள்

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அவர் பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வருகிறார். ஹெலிபேடு மைதானத்தில் விஜய் வழக்கமாக பயன்படுத்தும் பிரசார வாகனத்தில் நின்றபடியே உரையாற்றுவார்.

பொதுக்கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களுக்கு ‘கியூ-ஆர்’ கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருக்க வேண்டும்.