✈️ சென்னையில் 6-வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி

சென்னையில் இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

விமான பணியாளர்களின் பணி நேர கட்டுப்பாடுகள் காரணமாக, இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. அட்டவணைப்படி இயக்க வேண்டிய விமானங்களுக்கு போதுமான விமானிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால், கடந்த 5 நாட்களாக தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் முன்பதிவு செய்த பயணிகள் பயணத்தடை ஏற்பட்டு அவதிப்பட்டனர். விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் இண்டிகோ பணியாளர்களுக்கிடையே வாக்குவாதங்கள் நடந்துள்ளன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்ட நிலையில், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அட்டவணைகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கி, 3 நாட்களுக்குள் முழுமையாக சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சென்னையில் 6-வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இன்று ஒரே நாளில் மட்டும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மேலும், வேறு விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை 5 மடங்கு உயர்த்தியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.