ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும், குவைத்தில் இருந்து புறப்பட்ட குவைத் ஏர்வேஸ் விமானமும் இன்று காலை ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்தன. இந்த இரண்டு விமானங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாலை 5.30 மணியளவில் ஐதராபாத் விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதே சமயம், குவைத் ஏர்வேஸ் விமானம் நடுவானில் இருந்து திரும்பி மீண்டும் குவைத்திற்கு சென்றது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. தற்போது, இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை கண்டறிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.