அஜித்குமார் பங்கேற்க உள்ள செபாங்க் சர்க்யூட் போட்டிக்கான தகுதி சுற்று இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது.
தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், திறமையான கார் ரேசர் என்பதையும் நிரூபித்து வருபவர் அஜித்குமார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு அவர் முழுமையாக கார் பந்தயத்துக்கு கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் ரேசிங்கில் தீவிர ஈடுபாடு காட்டி வரும் அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ எனும் தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கியுள்ளார்.
அஜித்குமார் ரேஸிங் அணி துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளையும் பெற்றது. குறிப்பாக ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து பெருமை பெற்றது. தொடர்ந்து உலகளாவிய பல போட்டிகளில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சி , மலேசியாவில் நடைபெறும் செபாங்க் சர்க்யூட் போட்டியில் பங்கேற்க அஜித்குமார் கடந்த வாரமே மலேசியா சென்றடைந்தார். போட்டி தொடங்குவதற்கு முன், மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இன்றைய தகுதி சுற்றுக்குப் பிறகு, இறுதி போட்டி சனிக்கிழமை காலை நடைபெற உள்ளது. இதற்கிடையில், அஜித் ரேஸிங் சர்க்யூட்டில் நடைபயிலும் போது அவரை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகம் காட்டினர். அவர்களின் பாசத்தை கண்டு அஜித் மகிழ்ச்சி அடைந்து கையசித்து வாழ்த்தினார். பின்னர் தனது அணியுடன் சேர்ந்து போட்டிக்கான இறுதி தயாரிப்புகளில் ஈடுபட்டார்.