சென்னை:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித் குமார், தனது நடிப்பு திறமையுடன் சேர்த்து, தீவிர கார் பந்தய வீரராகவும் பிரபலமாக அறியப்படுகிறார். நடிப்பைத் தாண்டி, கார் பந்தயத்திற்கும் பெரும் ஆர்வம் கொண்ட அவர், கடந்த ஆண்டு முதல் பல்வேறு சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.

அஜித் குமார் தனது சொந்த கார் பந்தய அணியான ‘அஜித் குமார் ரேசிங்’ நிறுவனத்தையும் தொடங்கி, தொழில்முறை ரேசராக தன்னை நிலைநாட்டியுள்ளார். அவரின் அணி துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று பல பரிசுகளையும் வென்றுள்ளது. மேலும், அபுதாபி, பார்சிலோனா, மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற பல போட்டிகளிலும் அஜித் குமார் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பந்தய தளத்தில் அஜித்தை காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். சிலர் உற்சாகத்தில் கூச்சலிட்டதையடுத்து, அஜித் குமார் அவர்களிடம் அமைதியான முறையில் பேசினார்.

அந்த வீடியோவில் அஜித், “ப்ளீஸ்… ஒழுங்கா நடந்துக்கோங்க… இது தியேட்டர் கிடையாது…” என ரசிகர்களிடம் நிதானமாக கூறுகிறார். அவர் பேச்சு கடிந்துகொள்ளும் விதமாக அல்லாது, அமைதியும் ஒழுங்கும் காக்க வேண்டுமென நினைவூட்டும் விதமாக இருந்தது.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வேகமாக வைரலாகியுள்ளது. பலரும், “அஜித் எப்போதும் எங்கு இருந்தாலும் மரியாதையுடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்கிறார்,” என பாராட்டி வருகின்றனர்.

அஜித் குமாரின் இந்த நிகழ்வு, அவரது தொழில்முறை அணுகுமுறையையும் ரசிகர்களிடம் காணும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.