தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழி ஒன்று வைரலாகி வருகிறது.

தற்போதைய முன்னிலை நிலவரப்படி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 111-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக சுமார் 60-க்கும் மேற்பட்ட இடங்களிலும், திமுக கூட்டணி அதற்குக் குறைவான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலவரம் தமிழக அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. இதனால் விஜய் முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், கருணாநிதியின் அரசியல் தொடர்பான பொன்மொழிகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், மக்கள் இந்த தேர்தலில் மாற்றத்தை தேர்வு செய்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் இருந்தபோதிலும், வாக்காளர்கள் வேறுபட்ட தீர்மானத்தை எடுத்திருப்பது இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

எனினும், வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெற்று வருவதால் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை நிலைமைகள் மாறக்கூடும். தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்குமா என்பது விரைவில் தெரியவரும்.