புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது, அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான தருணமாக மாறியுள்ளது. காரணம், அவர் இந்திய அணிக்காக அறிமுகமான அதே தேதியில் இந்த உயரிய விருதை பெற்றிருப்பதுதான்.
கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி அயர்லாந்தின் பெல்பாஸ்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் மூலம் ரோகித் சர்மா இந்திய அணிக்காக அறிமுகமானார். இளம் வீரராக இந்திய அணியில் காலடி எடுத்து வைத்த அவர், அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது திறமையால் உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உயர்ந்தார்.
அறிமுகமான நாளிலிருந்து தொடங்கிய அவரது பயணம் இன்று இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னான அத்தியாயமாக மாறியுள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவங்களிலும் ரோகித் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,301 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் 285 ஒருநாள் போட்டிகளில் 11,720 ரன்களும், 159 டி20 சர்வதேச போட்டிகளில் 4,231 ரன்களும் அடித்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதங்கள், உலக சாதனைகள் மற்றும் பல்வேறு வெற்றிகளின் மூலம் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு 2024 ஜூன் 29-ம் தேதி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் விலகினார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ரோகித், இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கிய இந்த விருதை பெற்றுக்கொண்ட ரோகித், அந்த தருணத்தின் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகள், இந்திய அணிக்காக அளித்த பங்களிப்பு மற்றும் உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, இந்திய அணிக்காக அறிமுகமான ஜூன் 23-ம் தேதியிலேயே 19 ஆண்டுகளுக்குப் பிறகு பத்மஸ்ரீ விருதை பெற்றிருப்பது ரோகித் சர்மாவின் வாழ்க்கையில் மிக அரிதான மற்றும் மறக்க முடியாத சம்பவமாக பார்க்கப்படுகிறது.
ஒரு இளம் வீரராக தொடங்கிய பயணம், உலகக்கோப்பை வென்ற கேப்டனாகவும், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாகவும், தற்போது பத்மஸ்ரீ விருது பெற்ற விளையாட்டு வீரராகவும் உயர்ந்திருப்பது ரோகித் சர்மாவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக ரசிகர்கள் கருதுகின்றனர்.