தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொதுக்கூட்டங்களில் கடைப்பிடித்து வரும் நடை, மேடை அமைப்பு மற்றும் வரவேற்பு பாணியை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்திய கூட்டத்தில் பின்பற்றியதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, விருதுநகர் – கல்குறிச்சி பகுதிகளில் நடைபெற்ற திமுக தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்வின் போது அவர் மேடைக்கு வருகை தந்த விதம், சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட பாதையில் நடைபோட்டு, பின்னணியில் இசை ஒலிக்க மேடைக்கு அழைத்து வரப்பட்ட காட்சி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பொதுக்கூட்ட பாணியை ஒத்ததாக சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்து பதிவிட்டனர்.

இந்த நிலையில், கோவை தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் இந்த விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் தனது உரையில், “அதே டெய்லர், அதே வாடகை” எனக் கூறி, முதல்வர் ஸ்டாலினின் கூட்ட மேடை பாணியை சாடினார்.

ராஜ்மோகன் பேசுகையில், “ராம்ப் நடைபோட்டு, சிவப்பு கம்பளத்தை விரித்து, பின்னணியில் பாட்டு போட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலினை அழைத்து வருகிறார்கள். மாப்பிள்ளை அவர்தான்; ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை இன்னொருவருடையது. இது முழுக்க முழுக்க நகலெடுப்பு அரசியல்” என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து அவர், “ஒரு கடைக்கோடி தொண்டனாக நான் கேட்கிறேன். அந்த பேன்ட் கலர் கூட மாற்றாமல் அப்படியே காப்பி அடிப்பீர்களா? கீழே இருந்து துண்டு எடுத்து வீச, அதை எடுத்து போட்டுக் கொள்வதை பார்த்தோம். பொதுவாக நம் தளபதிக்கு மலர் கொடுப்போம். ஆனால் இங்கு, கொடுக்கப்பட்ட பூவை என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கிப் போட்டுவிட்டு போகிறார்” என குற்றம்சாட்டினார்.

மேலும், அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட ‘செல்ஃபி’ குறித்து விமர்சித்த ராஜ்மோகன், “எல்லாவற்றையும் நான் மன்னிப்பேன். ஆனால் அந்த செல்ஃபி எடுத்த காட்சியைத்தான் மன்னிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார். சிவப்பு கம்பளத்தில் நடந்து வருவதால் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், மக்கள் ஆதரவே அரசியலின் அடிப்படை என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பொதுக்கூட்டங்களை எடுத்துக்காட்டிய ராஜ்மோகன், “மக்கள் வெள்ளத்தில் ஆண்களும் பெண்களும் புடைசூழ, ஒரு திருவிழாவைப் போல மக்கள் ஆர்ப்பரித்து நிற்கும் சூழலில், மேடையில் ஒன்றியம் முதல் மாநில அளவிலான நிர்வாகிகள் காத்திருக்க, அந்தக் கூட்டத்தின் நடுவே எங்கள் தங்கத் தளபதி நடந்து வரும்போது ஏற்படும் உணர்வே தனி” என பேசினார்.

இருப்பினும், தனது உரையின் இறுதியில், “முதலமைச்சர் அண்ணனை நான் பெரிதும் மதிக்கிறேன். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என கூறி, தனிப்பட்ட மரியாதையை வெளிப்படுத்தினார்.

இந்த உரை தற்போது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தையும், சமூக ஊடகங்களில் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.