சென்னை:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வை கட்டாயமாக்காமல் விலக்கு அளித்த திமுக அரசை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ்ப் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து திமுக அரசு விலக்கு அளித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது” என கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “2006ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் கற்றல் சட்டம் – பிரிவு 3 இன்படி, தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, 2016ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழித் தேர்வை கட்டாயப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையையும் பின்னர் அதனை 2023ஆம் ஆண்டு வரை நீட்டித்தும் உத்தரவிட்டது,” என்றார்.

“20 ஆண்டுகளாக இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்மொழித் தேர்வு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், திமுக அரசு பிறமொழிப் பள்ளிகளின் கோரிக்கைக்கு இணங்க, இந்த ஆண்டும் தமிழ்மொழித் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளது. இது தமிழ் மொழிக்கான அரசின் பற்றின்மையையும் அலட்சியத்தையும் வெளிப்படுத்துகிறது,” என சீமான் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “உச்ச நீதிமன்றமே கூட ‘மாணவர்கள் தாங்கள் வாழும் மாநிலத்தின் மொழியை கற்றுக்கொள்வது நாட்டின் ஒற்றுமைக்கும், அவர்களது நலனுக்கும் உகந்தது’ என தீர்ப்பளித்துள்ளது. எனவே, தமிழ்மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது சட்டத்துக்கும் நீதிக்கும் விரோதமானது,” என்றார்.

தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளாகப் பொய்யான காரணங்களைச் சொல்லி தமிழ்மொழித் தேர்விலிருந்து விலக்கு பெற்று வருவதாகவும், அதற்கு திமுக அரசு துணைபோவது “தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான செயல்” என அவர் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் இறுதியாக வலியுறுத்தியதாவது, “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ்மொழித் தேர்வை கட்டாயமாக எழுதி, தமிழை வாழ வைக்கும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். ‘தமிழ் வாழ்க’ என வாசகங்கள் எழுதியால் மட்டும் தமிழ் வாழாது; அதனை சட்டமாக நடைமுறைப்படுத்தும் மனப்பாங்கு தேவை,” என சீமான் தெரிவித்துள்ளார்.