சென்னை,
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காயம் காரணமாக அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில், டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி தான் களமிறங்கும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் ஹசாரே தொடரின்போது இளம் வீரர் திலக் வர்மா காயம் அடைந்தார். இதனால் அவர் திட்டமிட்டபடி நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
அதேபோல், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் ஒருநாள் தொடரிலிருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார். மருத்துவ ஆலோசனையின் பேரில், டி20 தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த சூழலில், நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திலக் வர்மா முதல் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பும் வகையில், திலக் வர்மாவுக்கு மாற்றாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக 2023-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் காயம் மற்றும் அணித் தேர்வு காரணங்களால் டி20 அணியில் இடம் பெறாமல் இருந்த அவர், தற்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். அவரது அனுபவம் மற்றும் நடுத்தர வரிசை பேட்டிங் திறன் இந்த தொடரில் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரவி பிஷ்னோய் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். அவரது வேகமான லெக் ஸ்பின் பந்துவீச்சு நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றங்களுடன், இந்திய – நியூசிலாந்து டி20 தொடர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
r dapibus leo.