“பாடகர் சங்கீத்சன்னை இலங்கை அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும்” – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை!

சென்னை: ஈழத் தாயகத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்தும், மாவீரர்கள் குறித்தும் பாடல் பாடியதற்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீத்சன்னை இலங்கை அரசு உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இடதுசாரி அரசின் போலி முகமூடியைச் சங்கீத்சன்னின் கைது உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பாடலைக் கண்டு பயப்படும் இலங்கை அரசு:

சீமான் தனது அறிக்கையில், “ஈழத் தாயகம் பற்றியும், வீரம் செறிந்த அதன் விடுதலைப் போராட்ட வரலாறு பற்றியும், தாயக விடுதலைக்காகத் தங்களது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் மற்றும் தமிழர் பண்பாட்டுப் பெருமைகள் குறித்தும் தனது கணீரென்ற பாடல்களின் மூலம் வெளிப்படுத்திய பாடகர் சங்கீத்சன்னைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை இனவாத அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஈழத்தில் ஆயுதப் போராட்டம் மௌனித்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், பயங்கரவாதத்தை முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டோம் என்று கொக்கரிக்கும் இலங்கை அரசு, ஒரு தனிமனிதனின் பாடலைக் கண்டு இந்த அளவிற்கு நடுங்கிப் பயப்படுவது ஏன்? கோயிலில் நின்று பக்திப் பாடல்களையும், பண்பாட்டுப் பாடல்களையும் பாடுவதெல்லாம் கொடிய பயங்கரவாதம் என்றால், இலங்கை அரசின் அடக்குமுறையின் கீழ் ஈழத் தமிழர்கள் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இடதுசாரி அரசின் போலி முகம்:

இலங்கையின் தற்போதைய அதிபர் அனுரா குமார திசநாயக்க தலைமையிலான அரசைச் சாடியுள்ள சீமான், “கம்யூனிச அரசாங்கம் என்று தன்னைத்தானே உலகிற்குப் பறைசாற்றிக் கொள்ளும் இந்த அரசுக்கு இதைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் கற்பித்தார்களா? இதுதான் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும் தங்களுக்குக் காட்டிய வழியா? தமிழர்கள் தங்களது விடுதலைப் போராட்ட முன்னோர்களை நினைவுகூர்வது பயங்கரவாதம் என்றால், கடந்த காலங்களில் முந்தைய இலங்கை அரசுகளால் வேட்டையாடப்பட்ட தங்களது கட்சியின் முன்னோர்களை தற்போதைய ஆளும் கட்சியினர் நினைவுகூர்வது பயங்கரவாதமா? இல்லையா?

இடதுசாரிப் போர்வையில் காலங்காலமாகத் தீவிர சிங்கள இனவாதத்தையே கடைப்பிடித்து வரும் தற்போதைய இலங்கை அரசின் போலி முகமூடியைப் பாடகர் சங்கீத்சன்னின் கைது முற்றிலும் கிழித்தெறிந்துள்ளது. இலங்கையில் எந்தப் புதிய அரசு அமைந்தாலும், அது சிங்கள இனவாதக் கொள்கையிலிருந்து அணு அளவும் மாறாது என்பதை இக்கைது நடவடிக்கை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளுக்குச் சாட்டையடி:

அன்று தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம்தான் அமைதிக்குத் தடை என்று கூறி அதனை அழித்தொழித்த உலக நாடுகள், இன்று ஒரு பாடகரின் கைது விவகாரத்தில் என்ன பதில் கூறப்போகிறார்கள் என்று வினவியுள்ள சீமான், “பாடல் பாடினால்கூடப் பயங்கரவாதச் சட்டம் பாயும் என்றால், சிங்களர்களுடன் தமிழர்கள் எப்படி இணைந்து வாழ முடியும்? இலங்கையின் இந்த இனவாதக் கோர முகத்தை ஐக்கிய நாடுகள் மன்றமும், உலக நாடுகளும் இப்போதாவது உணர்ந்து, தமிழ் மக்களின் சுயநிர்ணய விடுதலைக்குத் துணைநிற்க வேண்டும்.

மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் தம்பி சங்கீத்சன்னின் விடுதலையை வலியுறுத்தித் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரத்த குரல் எழுப்ப வேண்டும். தங்களது முன்னோர்களைப் போற்றக்கூடாது என்பதைவிடவும், கலைகளைப் பயங்கரவாதம் என்று கூறி மறுப்பதை விடவும் கொடிய அடிமைநிலை வேறில்லை. எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள தம்பி சங்கீத்சன்னை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனத் தனது அறிக்கையில் சீமான் மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.