திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால், பலர் தங்களது தலைமுடியை பங்க் கட்டிங், ஸ்டெப் கட்டிங், தலையின் ஓரத்தில் கோடு எடுக்கும் போன்ற முறையற்ற சிகை அலங்காரத்துடன் வந்ததை ஆசிரியர்கள் கவனித்தனர்.

இதனால், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தலைமுடியை ஒழுங்காக வெட்டிக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆனால், சிலர் அதை ஏற்காமல் தொடர்ந்து முறையற்ற சிகையுடன் பள்ளிக்கு வந்தனர். இதைக் கண்டு உடற்கல்வி ஆசிரியர் பழனி, சுமார் 50 மாணவர்களை தனியாக நிற்க வைத்தார்.

அவர் உடனே தனது கைபேசி மூலம் அருகிலிருந்த முடி திருத்தும் தொழிலாளர்களை அழைத்து, மாணவர்களின் தலைமுடியை ஒழுங்குபடுத்துமாறு கூறினார். மாணவர்கள் “சார், நாளைக்கு சரி செய்துக்கொண்டு வருகிறோம்” என்று கெஞ்சினாலும், பழனி அதை ஏற்காமல், தனது சொந்த செலவில் ஒன்றரை மணி நேரத்தில் அனைவரின் தலைமுடியையும் ஒழுங்குபடுத்தினார்.

இந்த செயல் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் பாராட்டத்தக்கதாகக் கருதினர். பழனி கூறுகையில், “கல்வியை விட ஒழுக்கம் முக்கியம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் அந்த கல்வி பயன் தராது. மாணவர்களின் எதிர்கால நலனுக்காகவே அவர்களின் சிகை அலங்காரத்தை ஒழுங்குபடுத்தினேன். இனி எந்த மாணவரும் தங்கள் விருப்பப்படி சிகை அலங்காரம் செய்யக்கூடாது என்பதற்காக அறிவுரை வழங்கியுள்ளேன்” என்றார்.

மாணவர்களின் ஒழுக்கத்தை காக்கும் இந்த நடவடிக்கை, கல்வியுடன் ஒழுக்கமும் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. மாணவர்கள் நல்ல முறையில் வளர, ஆசிரியர்களோடு பெற்றோரும், சமுதாயமும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே உண்மை.