தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி மாநிலம் முழுவதும் அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ஆட்சியமைப்பது யார்? அரியணையில் அமரப்போவது எந்த கட்சி? என்ற கேள்விகளுக்கு இன்று பதில் கிடைக்க உள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதனால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆவலுடன் முடிவுகளை கவனித்து வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கைக்காக மாநிலம் முழுவதும் 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் பல சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று வாரியாக கணக்கிடப்படுகின்றன. காலை 11 மணிக்குள் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் முகவர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

காலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்று முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும். இறுதி முடிவுகள் மாலை முதல் நள்ளிரவு வரை வெளியாகும் வாய்ப்பு உள்ளது. வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு வெற்றிச்சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்கிறதா, அதிமுக மீண்டும் அதிகாரத்துக்கு வருகிறதா, அல்லது புதிய சக்திகள் அதிர்ச்சி தருகிறதா என்பது இன்று தெரியவர உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நாளாக இன்று பார்க்கப்படுகிறது.