
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை வெளியாக உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றுள்ளதால், யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வருகிற மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆனால் அதற்கு முன்பாக வெளியாகும் எக்ஸிட் போல் கணிப்புகள் அரசியல் சூழலை பரபரப்பாக்கியுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா அல்லது அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதேசமயம் புதிய அரசியல் சக்தியாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதும் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக உள்ளது.
விஜய் பெற்ற வாக்குகள் யாரை அதிகம் பாதிக்கும்? திமுகவா? அதிமுகவா? அல்லது தனி சக்தியாக உருவெடுப்பாரா? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் சூடான விவாதமாக மாறியுள்ளது. பல யூடியூப் சேனல்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களும் இதையே அலசி வருகின்றனர்.
இன்று மாலை மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் பல தேசிய தொலைக்காட்சிகள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட உள்ளன. இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி தொடருமா, கேரளத்தில் இடதுசாரிகள் மீண்டும் வருமா, மேற்கு வங்காளத்தில் மம்தா ஆட்சி தொடருமா, அசாமில் பாஜக நிலைத்திருக்குமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
எனினும், கருத்துக்கணிப்புகள் முன்னோட்டம் மட்டுமே. உண்மையான தீர்ப்பு மக்கள் வாக்கு எண்ணிக்கையில் தான் வெளிவரும்.