
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மழை பெய்யும் சூழல் உருவாகியிருப்பது மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தெற்கு ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களிலும் தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும் என்றும், சில மலை மற்றும் மேற்கு மாவட்டங்களில் கனமழை பதிவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதிக ஈரப்பதம் காரணமாக மக்கள் அசௌகரியம் உணரக்கூடும்.
மேலும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.