உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையில் முறைகேடாக வண்டல் மண் அள்ளி விற்கப்பட்ட விவகாரத்தில், தினத்தந்தி செய்தி எதிரொலியாக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து மண் அள்ளும் பணியை உடனடியாக நிறுத்தியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பாலாற்றைத் தடுத்து கட்டப்பட்ட திருமூர்த்தி அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, அணையை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கோடை காலத்தையொட்டி அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கியது. கடந்த 27-ஆம் தேதியிலிருந்து வண்டல் மண் எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், சில நபர்கள் விவசாயிகள் போர்வையில் வண்டல் மண்ணை லாரிகளில் அள்ளிச் சென்று வணிக ரீதியாக விற்பனை செய்வதாகக் கடுமையான புகார்கள் எழுந்தன. இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்த விரிவான செய்தி தினத்தந்தி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. இதன் உடனடி எதிரொலியாக, வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருமூர்த்தி அணைப் பகுதிக்கு நேரில் சென்று அங்கு வண்டல் மண்ணை அள்ளிச் சென்ற வாகனங்களைச் தீவிர சோதனை செய்தனர். இதில் முறைகேடாக வண்டல் மண் வெளியில் விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அணையில் வண்டல் மண் அள்ளும் பணியை உடனடியாகத் தடுத்து நிறுத்தி அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இதனிடையே, இதுவரை எடுக்கப்பட்ட வண்டல் மண் விற்பனைக்காக எங்கு கொண்டு செல்லப்பட்டது, எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது மற்றும் இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும், தவறு இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.