சென்னை: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஒரு மாதத்தில் மேற்கொண்ட அதிரடி சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் லஞ்சம் வாங்கியதாக 24 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுபவர்களைக் கண்காணிக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக 24 பொறிவைப்பு (டிராப்) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அலுவல் ரீதியான பணிகளைச் செய்வதற்காக ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கேட்டுப் பெற்ற அரசு ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அறநிலையத்துறை இணை ஆணையாளர், வட்டாட்சியர், இளநிலை உதவியாளர், உதவி மின் பொறியாளர், மின் வாரிய வணிக ஆய்வாளர், சமூக நல விரிவாக்க அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் (VAO), இரண்டாம் நிலை காவலர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் (SI) உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள அரசு ஊழியர்கள் அடங்குவர்.

அதிரடி சோதனைகளும் ரொக்கப் பறிமுதலும்:

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 13 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனைகளை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.13,39,080 கைப்பற்றப்பட்டது. மேலும், மாநில எல்லைகளில் அமைந்துள்ள 6 வாகன சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரூ.9,87,890 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல், கடந்த மாதம் 17 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் மாவட்ட ஆய்வுக்குழுவினருடன் இணைந்து திடீர் தணிக்கை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.13,88,750 கைப்பற்றப்பட்டது. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஜி-பே’ (G-Pay) ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.94,69,887 கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு சோதனைகள் மூலம் ரூ.1,31,85,607 மதிப்புள்ள பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் கைது மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைகள்:

லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பும் பல ஊழல் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் தமிழக சிறப்பு காவல்படை 11வது பட்டாலியனில் போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்சம் வசூலிக்கப்பட்ட புகாரில், சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று போலீசார் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் கட்டிடப் பணிகளுக்கான பில் தொகை வழங்க ரூ.20,000 லஞ்சம் வாங்கிய துணை பிடிஓ (பொது) லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய மின் பகிர்மான உதவிப் பொறியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த தொடர் நடவடிக்கைகள் அரசு அலுவலகங்களில் ஊழல் புரிவோருக்குக் கடுமையான எச்சரிக்கையாக மாறியுள்ளது.