சென்னை:

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக இந்திய அருமணல் நிறுவனம் (IREL) பெற்றிருந்த நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்திருப்பதாக வெளியான தகவல்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடியதாக கருதப்படும் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுவது ஏற்க முடியாதது என தெரிவித்துள்ளார்.

கிள்ளியூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசுபாடு, கதிரியக்க அபாயம் மற்றும் பொதுமக்களின் உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த நில ஒதுக்கீட்டு அனுமதியின் காலம் முடிவடையும் தருணத்தில், மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில், இதே அணுக்கனிம சுரங்கத் திட்டம் குறித்து கட்சி எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியிருந்ததாகவும், அப்போது இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது எனக் கூறியிருந்ததாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.

ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அதே திட்டத்திற்கு ஆதரவாக அனுமதி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முரணானது என்றும், கன்னியாகுமரி மக்களின் நம்பிக்கைக்கு எதிரான செயல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கிள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் மக்களின் உடல்நலம், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அணுக்கனிம சுரங்கத் திட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.