சென்னை:

தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் என்.இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ இளையராஜாவை சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்ற நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அவர் தன்னை இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள் (IPDS) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக அறிமுகப்படுத்தி, முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரின் சார்பில் பேசுவதாக தெரிவித்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் நேரில் சந்திக்க வேண்டும் என கூறிய அவர், பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், அந்த வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக ரூ.35 கோடி வரை வழங்க தயாராக இருப்பதாக ஆசை வார்த்தை கூறியதாகவும், அதனை இளையராஜா மறுத்தபோது அவருக்கும் குடும்பத்தினருக்கும் பின்விளைவுகள் ஏற்படும் என மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜூன் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் எம்எல்ஏ இளையராஜா அதிகாரப்பூர்வ புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

விசாரணையின் முதல் கட்டத்தில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கரூரைச் சேர்ந்த சில நபர்களின் பெயர்களும் வெளிவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சில ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை இலக்காக வைத்து பேரம் பேசப்பட்டிருக்கலாம் என்றும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கோடிக்கணக்கில் தொகை வழங்க திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவருடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும், அதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் பதில் அல்லது விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. எனவே விசாரணை முடிவுகள் மற்றும் நீதிமன்ற நடைமுறைகளின் அடிப்படையிலேயே உண்மை நிலை தெளிவாகும் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், காவல்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை முடிவுகள் மீது அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.