சென்னை:
தமிழகத்தில் ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், முதல்-அமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. தேர்தலுக்கு முன்பாக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஆரம்பத்தில் எந்த கட்சியும் கூட்டணியில் இணையவில்லை.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் காங்கிரஸ் கட்சி முதலில் தவெக-வுக்கு ஆதரவு அளித்து கூட்டணியில் இணைந்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அண்மையில் மதிமுகவும் கூட்டணியில் இணைவதாக அறிவித்தது.
இந்த சூழலில், கூட்டணியை ஒருங்கிணைத்து வலுப்படுத்தவும், ஆட்சியை முழு ஐந்து ஆண்டுகள் நிலையாக நடத்துவதற்கான திட்டங்களை வகுக்கவும் சென்னை அருகே கோவளத்தில் உள்ள பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கூட்டணியின் எதிர்கால செயல்திட்டங்கள், அரசின் மக்கள் நல திட்டங்கள், சட்டமன்ற அரசியல் சூழ்நிலை மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கூட்டணிக்கு ஒரு பொதுப்பெயர் சூட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணியின் பெயர் குறித்து அடுத்த கட்ட ஆலோசனையில் முடிவு செய்யப்படும். இது இயற்கையாக அமைந்த கூட்டணி” என்று தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள், இந்த அரசு தனது முழு ஐந்தாண்டு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். தமிழக அரசியலில் உருவாகியுள்ள புதிய கூட்டணி அமைப்பு எதிர்கால அரசியல் சூழ்நிலையை மாற்றக்கூடிய முக்கிய சக்தியாக அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.