சென்னை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் (TANGEDCO) நடத்திய அதிரடி ஆய்வுகளில் 59 மின் திருட்டுகள் மற்றும் 11 மின் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமாக ரூ.68.81 லட்சம் இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி அமலாக்க கோட்டப் பிரிவுகளின் கீழ் செயல்படும் பல்வேறு அமலாக்க உபகோட்ட அலுவலகங்கள் இணைந்து கடந்த ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு, கோபி, தர்மபுரி, கோயம்புத்தூர் தெற்கு, உடுமலைப்பேட்டை, மேட்டூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட மின் பகிர்மான வட்டங்களில் இந்த திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த ஆய்வுகளின் போது 59 மின் திருட்டு சம்பவங்களும், 11 மின் பயன்பாட்டு விதிமீறல்களும் கண்டறியப்பட்டன. சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்தியவர்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை மற்றும் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னை அமலாக்க கோட்டத்தின் சார்பில் ரூ.15.77 லட்சம், கோயம்புத்தூர் அமலாக்க கோட்டத்தின் சார்பில் ரூ.26.71 லட்சம், மதுரை அமலாக்க கோட்டத்தின் சார்பில் ரூ.6.75 லட்சம் மற்றும் திருச்சி அமலாக்க கோட்டத்தின் சார்பில் ரூ.19.56 லட்சம் என மொத்தமாக ரூ.68.80 லட்சத்திற்கும் அதிகமான தொகை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில மின் நுகர்வோர் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க முன்வந்ததாகவும், அதன்படி ரூ.3.40 லட்சம் சமரசத் தொகை செலுத்தியதால் அவர்கள் மீது காவல்துறையில் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் திருட்டு என்பது அரசுக்கு மட்டுமல்லாமல் நேர்மையாக மின்கட்டணம் செலுத்தும் பொதுமக்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் குற்றமாகும். இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
மின் திருட்டு குறித்த தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி அமலாக்க பிரிவுகளுக்கான சிறப்பு உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
மின்சார பயன்பாட்டில் சட்ட விதிகளை கடைபிடிப்பதன் மூலம் மின் இழப்புகளை குறைத்து, மின் விநியோகத்தை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் வலியுறுத்தியுள்ளது.