
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முக்கிய முன்னிலை பெற்று அரசியல் களத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. 10 மணி நிலவரப்படி தவெக சுமார் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு குறித்து கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், வெற்றி பெறும் வாய்ப்புள்ள தவெக வேட்பாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைமையில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மற்ற கட்சிகள் ‘குதிரை பேரம்’ மூலம் வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை ஒன்றாக வைத்துப் பாதுகாக்கும் வகையில், மாமல்லபுரம் பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் தங்க வைக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நேரத்தில் அரசியல் நிலைமைகள் வேகமாக மாறக்கூடிய சூழலில், கட்சி நிலைப்பாட்டை உறுதியாக வைத்திருக்க இந்த முயற்சி எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளுக்கு எதிராக புதிய சக்தியாக உருவெடுத்த தவெக, ஆரம்ப முன்னிலை மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.