தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் சென்னை அரசியல் களத்தில் முக்கிய மாற்றம் காணப்படுகிறது. ஆரம்பத்தில் திமுக முன்னிலை பெற்றிருந்தாலும், தற்போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சென்னையின் 16 சட்டசபை தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று வாரியாக எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்ப கட்டத்தில் திமுக முன்னிலையில் இருந்தாலும், பின்னர் ஏற்பட்ட மாற்றத்தில் தவெக பல தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

சென்னையில் தவெக முன்னிலை பெற்றிருப்பது இந்த தேர்தலில் மிகப்பெரிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்களிடையே இந்த கட்சிக்கு கிடைத்த ஆதரவு கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிமுக இரண்டாம் இடத்திலும், திமுக மூன்றாம் இடத்திலும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தவெக, முதல் முறையாக போட்டியிட்ட தேர்தலிலேயே தலைநகரில் முன்னிலை பெறுவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

எனினும், இது ஆரம்ப நிலவரம் மட்டுமே என்பதால் அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமைகள் மாறக்கூடும். இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.