உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்த குடும்பம் மீது பிக்கப் வாகனம் மோதியதில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சந்தோஷ் சர்மா, அவரது மனைவி கிரண் மற்றும் மகன் ஷோபித் ஆகியோர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். ததியாரி கிராமம் அருகே சென்றபோது, எதிர்திசையில் வந்த பிக்கப் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். சந்தோஷ் சர்மா மற்றும் கிரண் பலத்த காயமடைந்த நிலையில், மகன் ஷோபித்திற்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சந்தோஷ் சர்மா மருத்துவமனைக்கு செல்லும் முன்பே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது மனைவி கிரண், மேல்சிகிச்சைக்காக பரூக்காபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்துக்குப் பிறகு பிக்கப் வாகன ஓட்டுநர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.