Add Your Heading Text Here
வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தி, தகுதியான வாக்காளர்களைச் சேர்க்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (Special Intensive Revision – SIR) நாடு முழுவதும் மேற்கொண்டது. இந்தப் பணிகள் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கார், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்பட்டன.
கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கிய இந்த வாக்காளர் திருத்தப் பணிகள், ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், நேற்று முந்தினம் முழுமை பெற்றன. இந்த காலகட்டத்தில், எஸ்.ஐ.ஆர் தொடர்பான படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு, புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் போன்றவற்றை நீக்குதல் ஆகிய பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. 2002 முதல் 2005 வரையிலான எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு வெளியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, இந்த முறை திருத்தப் பணிகள் நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், கேரளா மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தமாக சுமார் 95 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள 3.10 லட்சம் வாக்காளர்களில், சுமார் 64 ஆயிரம் பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. கேரளாவில், 2.78 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில் 24.08 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சத்தீஷ்கார் மாநிலத்தில், 2.12 கோடி வாக்காளர்களில் 27.34 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில், மொத்தம் 5.74 கோடி வாக்காளர்களில், 42.74 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம் பெறவில்லை.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அல்லது திருத்தம் செய்ய வேண்டியவர்கள், உரிய ஆவணங்களுடன் எதிர்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த எதிர்ப்பு மற்றும் திருத்தப் பணிகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது