சென்னை:

திமுகவில் இருந்து விலகிய விஜயின் முன்னாள் மேனேஜர் பிடி செல்வக்குமார், “அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன். மாற்றம் வரும் எனத் திமுகவில் சேர்ந்தேன். ஆனால் ஏமாற்றப்பட்டேன்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.

விஜயின் ‘சுறா’, ‘வில்லு’, ‘போக்கிரி’ படங்களுக்கு பிஆர்ஓவாகவும், ‘புலி’ படத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் பிடி செல்வக்குமார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், விஜயிடம் இருந்து விலகிய பின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். பின்னர் கலப்பை மக்கள் இயக்கம் தொடங்கி சமூக சேவைகளில் ஈடுபட்டார். பள்ளிகளுக்கு கட்டடங்கள் அமைத்தார்.

கடந்த டிசம்பரில் திமுகவில் இணைந்து மாநில வர்த்தக அணி துணைச் செயலாளரானார். சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் சீட் கிடைக்கவில்லை. இதனால் இன்று திமுகவிலிருந்து விலகினார்.

பத்திரிகையாளர்களைச் சந்தித்த செல்வக்குமார், “கன்னியாகுமரி என் தொகுதி. 12 ஆண்டுகளாக மண்ணோடு மண்ணாக சேவை செய்தேன். சர்வீசில் ஜெயித்தேன். ஆனால் அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன். தேசிய கட்சிகள் உட்பட 3-4 பேர் ஆதரவு கேட்டுள்ளனர். ரவடித்தனம், கட்டபஞ்சாயத்துக்கு ஆதரவு இல்லை” எனக் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின், “செல்வாக்குள்ளவர்களுக்கு சீட்” என வாக்குறுதி அளித்ததாகக் கூறினார். “என் பெயர் உளவுத்துறை அறிக்கையில் நம்பர் ஒன். ஆனால் வாரிசுகள், பணமாளிகள், குவாரிக்காரர்களுக்கு மட்டும் சீட். படித்தவர்கள், பண்பாளர்களை சமூகத்திற்குள் வரவிடமாட்டார்கள்” என விமர்சித்தார்.

“விஜய்க்கு 27 ஆண்டுகள் உழைத்து நற்பெயர் கொண்டுவந்தவன். என் உழைப்பைப் பயன்படுத்துவதா? மாற்றம் வரும் எனத் திமுகவில் சேர்ந்தேன். ஆனால் ஏமாற்றப்பட்டேன். முதல்வர் அன்போடு பார்த்தார். ஆனால் சதுரங்கத்தில் நல்லவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள்” என ஆதங்கம் தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் உத்தி விமர்சித்த செல்வக்குமார், “புதிதாக வர வாங்கிறார்கள். ஆனால் சீட் தர மாட்டார்கள்” எனக் கூறினார். தனது ஆதரவு நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.