பல்லாவரம்:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 30ஆவது இடத்தில் பல்லாவரம் தொகுதி அமைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், ஆலந்தூர் தொகுதிகளிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு 2010இல் பல்லாவரம் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய தொல்லியல் இடங்களில் பல்லாவரமும் ஒன்று. 1863இல் ராபர்ட் புரூஸ் ஃபூட் இங்கு பழங்கற்கால கருவிகளைக் கண்டுபிடித்தார். இது இந்தியாவின் முதல் பழங்கற்கால ஆதாரங்களில் ஒன்றாகும். எனவே பல்லாவரம் ‘இந்திய பழங்கற்கால ஆய்வின் பிறப்பிடம்’ என அழைக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையம், நாகல்கேணி தோல் தொழிற்சாலைகள், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை தொகுதியின் அடையாளங்கள். வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை பிரபலம். இங்கு எல்லா பொருட்களும் கிடைக்கும். தொகுதியில் மீனம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம், குரோம்பேட்டை, திருநீர்மலை, பொழிச்சலூர், திரிசூலம் பகுதிகள் உள்ளன.
2011இல் அதிமுகவின் ப.தன்சிங் வென்றார். 2016, 2021இல் திமுகவின் இ.கருணாநிதி வெற்றி பெற்றார். தொகுதியில் குறுகிய தெருக்கள், வாகன நிறுத்த இடங்களின்மை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. பல்லாவரம்-பம்மல், பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலைகளில் நெரிசல் அதிகம். மழைக்காலத்தில் கழிவுநீர் தேங்குதல், குடிநீர் கலப்படம், கொசு தொல்லை, துர்நாற்றம் பிரச்சினைகளாக உள்ளன.
இம்முறை திமுக இ.கருணாநிதிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தேமுதிகவின் அனகை டி.முருகேசன் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் 2011இல் செங்கல்பட்டு எம்எல்ஏ. அதிமுக கூட்டணியில் ஐஜேகேவின் வழக்கறிஞர் வெங்கடேசன் இரட்டை இலை சின்னத்தில். நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் கார்த்திகேயன், த.வெ.க.வின் ஜே.காமாட்சி போட்டியிடுகின்றனர். ஐஜேகே வேட்பாளரைத் தவிர மற்றவர்கள் உள்ளூரவர்கள். அனைவரும் தீவிர பிரசாரத்தில் உள்ளனர்.
தேமுதிக, ஐஜேகேவுக்கு கூட்டணி பலம். கடந்த இரு தேர்தல்களிலும் திமுக வென்ற தொகுதி என்பதால் தேமுதிக நம்பிக்கை. த.வெ.க. புதிய வரவு, உள்ளூர் பிரச்சினைகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். வாக்காளர்கள்: ஆண் 1,61,197; பெண் 1,68,996; மூன்றாம் பாலினம் 24; மொத்தம் 3,30,217.