புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சேத்தூர்–பண்டாரவாடை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷவாகினி மாரியம்மன் ஆலய வளாகத்தில் 20.12.2025 அன்று ஆகாயத்தாமரையை பயன்படுத்தி உரம் தயாரித்தல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நீர்நிலைகளில் அதிகளவில் காணப்படும் ஆகாயத்தாமரையை அகற்றி, அதனை இயற்கை உரமாக மாற்றும் முறைகள், மண் வளம் மேம்பாடு மற்றும் வேளாண் பயன்பாடுகள் குறித்து நடைமுறை ரீதியாக விளக்கிக் காட்டப்பட்டது.

பெண்கள் விவசாயிகள் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இந்த செய்முறை விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஆகாயத்தாமரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் குறித்து மாணவர் ஸ்ரீதர் விரிவாக விளக்கினார். அதனைத் தொடர்ந்து, ஆகாயத்தாமரையை பயன்படுத்தி உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து மாணவர்கள் தமிழ் மாறன், ஸ்ரீராம் சாம், நந்தக்குமார், சேரன், திருவிசாகன் ஆகியோர் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளித்தனர்.
மேலும், ஆகாயத்தாமரை பயன்படுத்தி மாட்டு தீவனம் தயாரிக்கும் முறைகள் குறித்து மாணவர் தண்டபாணி விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கினார்.
மேலும், விவசாயி திரு. கண்ணபிரான் அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் ஆகாயத்தாமரை பயன்படுத்தி உரக் குழி அமைக்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னர், டாக்டர் எஸ். ஆனந்த்குமார் அவர்கள், விவசாயிகள் மற்றும் அப்பகுதி மகளிருடன் ஆகாயத்தாமரையை தொடர்ந்து சுயசார்பாக பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடி, உள்ளூர் மக்களை இணைத்து “பசுமைப் படை” என்ற அமைப்பை உருவாக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
நிறைவாக, அக்கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள் மற்றும் விவசாயிகளான கண்ணபிரான், ரவி, ஆறுமுகம், ஜெயராஜ், உலகநாதன், பத்மநாதன், கலியமூர்த்தி, பிரான்சிஸ், செந்தில்குமார், ராஜசேகர், அமுதா, ஆனந்தி, ராஜேஸ்வரி, கமலா மற்றும் ரூபி ஆகியோர் அடங்கிய பசுமைப் படை அமைப்பை தொடங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தக் குழு ஆகாயத்தாமரை பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என உறுதி செய்யப்பட்டது.