சென்னை:

2026–2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காகிதமில்லா வடிவில் பட்ஜெட்டை வாசித்தார். இதன் பின்னர் அவர் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

பட்ஜெட்டில் மகளிர் நலனுக்கான திட்டங்கள் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” எனும் பெயரில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதுவரை ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளதாக கூறிய அவர், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகையாக ரூ.3,000க்கும், அதனுடன் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000வும் சேர்த்து மொத்தம் ரூ.5,000 மகளிரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். இதற்காக ரூ.6,500 கோடி செலவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், இதை பலரும் “வாக்கு வேட்டைக்கான அரசியல் முயற்சி” எனக் குறிப்பிடுகின்றனர். மாநிலம் முழுவதும் நிதி நெருக்கடி நிலவிக் கொண்டிருக்கும்போது, இத்தகைய பெரும் நிதி ஒதுக்கீடு தேர்தலை முன்னிட்டு மக்களைக் கவரும் அரசியல் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. மக்கள் நலனுக்கான நிரந்தர மாற்றத்தை விட, உடனடி வாக்குப் பலனை நோக்கி திமுக அரசு செயல் படுகிறது என அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.

பட்ஜெட்டில் மேலும் இலங்கைத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், சுயஉதவிக் குழு கடனுதவி, ‘விடியல் பயணம்’ இலவச பேருந்து திட்டம், ‘புதுமைப்பெண் திட்டம்’ ஆகியவை தொடரப்படும் என கூறப்பட்டது. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டதாகவும், 6.95 லட்சம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், நிதி ஆதாரமற்ற பிரசார அறிவிப்புகள் மாநில பொருளாதாரத்தை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மகளிருக்கு உதவுமா, அல்லது வாக்கு வேட்டைக்கான அரசியல் கருவியா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாகியுள்ளது.